உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருமூர்த்திமலையில் காட்சிப்பொருளாக மாறிய புறக்காவல் நிலையம்

Published On 2022-04-16 07:13 GMT   |   Update On 2022-04-16 07:13 GMT
திருமூர்த்திமலையில், அத்துமீறல்களை தவிர்க்க, காட்சிப்பொருளாக மாறியுள்ள புறக்காவல் நிலையத்துக்கு போலீசார் நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
உடுமலை:

உடுமலை அருகே திருமூர்த்திமலை ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. 

இங்குள்ள அணை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் விதிகளை மீறி அத்துமீறுபவர்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக அணையின் நீர்த்தேக்க பகுதியான யானை கெஜம் பகுதியில், குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை பலரும் மீறுகின்றனர். 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், யானை கெஜம் பகுதிக்கு செல்ல முடியாமல், கம்பி வேலி அமைத்தும், எதிர்புறத்தில் உள்ள வழித்தடம் வழியாக பலரும் அத்துமீறி சென்று குளிக்கின்றனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள், அறிவுறுத்தினாலும், சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை. 

இதனால், சுற்றுலா சீசன்களில் அணைப்பகுதியில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

மேலும் அணைக்கரையில், கம்பி வேலி இல்லாத பகுதிகளுக்குள் செல்பவர்கள், தீ விபத்து ஏற்படும் வகையில் செயல்படுகின்றனர். 

இத்தகைய செயல்களில், ஈடுபடுபவர்களால்  பிற சுற்றுலா பயணிகளும் வேதனைக்குள்ளாகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அத்துமீறல்களை கண்காணித்து தடுக்கும் வகையில், திருமூர்த்திமலை கோவிலில் புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டது.

இங்கு தளி போலீஸ் நிலையத்தில் இருந்து சுழற்சி முறையில், போலீசார் நியமிக்கப்பட்டு வந்தனர். பின்னர் போலீசார் நியமிக்கப்படாமல் புறக்காவல் நிலையம் காட்சிப்பொருளாக மாறி, தகவல் பலகை மட்டுமே உள்ளது. 

கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து செல்ல பக்தர்கள் எண்ணிக்கையும் திருமூர்த்திமலைக்கு அதிகரித்துள்ளது. 

கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அத்துமீறல்களை தடுக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், திருமூர்த்திமலை புறக்காவல் நிலையத்திற்கு நிரந்தரமாக போலீசாரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
Tags:    

Similar News