செய்திகள்
சொந்த ஊர் செல்வதற்காக கோவை நஞ்சப்பா ரோடு பார்க்கேட் பகுதிக்கு மூட்டை முடிச்சுகளுடன் வந்த வட மாநில தொழிலாளர்கள்

கொரோனா 2-வது அலை எதிரொலி : சொந்த ஊருக்கு புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்

Published On 2021-04-05 02:14 GMT   |   Update On 2021-04-05 02:14 GMT
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கோவை:

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும் பஸ், ரெயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன.இதன் காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். அப்போது கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர்.

இதையடுத்து கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வட மாநில தொழிலாளர்கள் மீண்டும் குடும்பத்துடன் கோவை வந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக கோவையிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவுகிறது.

இதனால் வடமாநிலத்தில் இருந்து கோவை வந்து தங்கி பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வடமாநிலத்தவர்கள் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் வடமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

அப்போது அவர்கள் தாங்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உடைமைகளை மூட்டை முடிச்சுகளாக கட்டிக்கொண்டு குடும்பத்துடன் புறப்பட்டு செல்கின்றனர். ஒரு சில தொழிற்சாலைகள் தங்களின் சொந்த செலவில் ஆம்னி பஸ் மூலம் கோவை பார்க்கேட் பகுதியில் வரவவைத்து வடமாநில தொழிலாளிகளை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகின்றனர். இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், கோவையில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், கொரோனா 2-வது அலை எதிரொலி யாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கருதுகிறோம்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் போதிய வேலையின்றி அவதிக்குள்ளானோம். இதனால் இந்த ஆண்டும் அவ்வாறு அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில் சொந்த ஊர்களுக்கு செல்கிறோம். கோவையில் கொரோனா தொற்று குறைந்து இயல்புநிலைக்கு திரும்பியதும் மீண்டும் கோவைக்கு வந்து வழக்கம் போல் வேலைகளில் ஈடுபடுவோம் என்றனர்.
Tags:    

Similar News