செய்திகள்

மும்பையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரெயிலில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

Published On 2018-04-25 12:25 GMT   |   Update On 2018-04-25 12:25 GMT
மும்பையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்:

தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போதும் பெட்டிக்கடை, மளிகைகடை ஆகியவற்றில் கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள குடோன்களிலும் குட்கா பதுக்கி விற்கப்படுகிறது. சாலை மார்க்கமாக குட்கா பொருட்களை கடத்தி வந்தால் சோதனைச்சாவடிகளில் சிக்கி விடுகிறார்கள். எனவே அதற்கு மாற்றாக தற்போது ரெயிலில் அதிகஅளவு குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தது. அதிலிருந்த பார்சல் பொருட்களை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் பார்சல் பொருட்களை சோதனை செய்தனர்.

அதில் சுமார் 12 மூட்டையில் ஒரு டன் அளவு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

மும்பை பாந்த்ரா ரெயில் நிலையத்தில் இருந்து அனுப்பபட்டுள்ளது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்து யாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News