ஆன்மிகம்
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தேரோட்டம், சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்

Published On 2020-09-28 06:46 GMT   |   Update On 2020-09-28 06:46 GMT
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. கோவில் பணியாளர்களே தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முசிறி அருகே உள்ள குணசீலத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் தங்கியிருந்து முறைப்படி விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் வினைகள் யாவும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் திருப்பதிக்குச் சென்று தங்களது வேண்டுதல்களை செலுத்த முடியாத பக்தர்கள் அவற்றை இங்கு வந்து நிறைவேற்றி சுகம் பெறுகின்றனர். இதனால் தென்திருப்பதி என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

அன்று முதல் ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5.30 மணிக்கு பெருமாள் தேர்தட்டில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு தேரை பொக்லைன் எந்திரம், டிராக்டர் உதவியுடன் திருக்கோவில் பணியாளர்களே வடம் பிடித்து இழுத்தனர். 6.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் வகையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் டோக்கன் அளித்து பெருமாளை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பக்தர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலை கண்டறியப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 3 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், 4 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு புண்ணியாகவாசனம், இரவு தீபாராதனையும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் சேவை சாதிக்கிறார். அதைத்தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அதிக அளவில் பக்தர்கள் வருவதைத் தடுக்கும் பொருட்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை www.gunaseelamtemple.com என்ற கோவில் இணையதளத்தில் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே காணும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News