ஆன்மிகம்
ஆதி அண்ணாமலையார் கோவில்

வாழ்வில் ஒளியேற்றும் ஆதி அண்ணாமலையார் கோவில்

Published On 2021-01-15 01:23 GMT   |   Update On 2021-01-15 01:23 GMT
திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ‘ஆதி அண்ணாமலையார்’ கோவில்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு முன்பாக அமைந்த, அதாவது ஆதியில் அண்ணாமலையார் திருக்கோவிலாக இருந்த ஆலயம், திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அடி அண்ணாமலை என்ற ஊரில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ‘ஆதி அண்ணாமலையார்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘உண்ணாமுலையாள்’. பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த மூலவர், இந்தக் கோவிலில் அமைந்திருப்பது சிறப்பானது. நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர், திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது.

அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவே. அதாவது ஆதி திருத்தலம். அதனால், ‘ஆதி அண்ணாமலையார் திருக்கோவில்’ என போற்றப்படுகிறது. ‘அணி அண்ணாமலை’ என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும், சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், “வேறெங்கும் களைய முடியாத பாவங்கள், அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும்” என்று கூறியதாக, புராணத் தகவல் சொல்கிறது. ‘அணி’ என்ற சொல் ‘அழகை’ குறிக்கின்றது.

தலவரலாறு

ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் சிறந்தவர் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். தங்கள் தொழிலையும் மறந்து தர்க்கத்தைத் தொடர்ந்தனர். இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான், அவர்கள் முன்பாகத் தோன்றினார். “என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை, யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே சிறந்தவர்” என்று கூறினார். இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண வராக உருவம் தாங்கி, பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மதேவன், ஈசனின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது, சிவபெருமானின் சிரசில் இருந்து விழுந்த தாழம்பூ, கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. தாழம்பூவைக் கண்ட பிரம்மன், அதனிடம் தான் ஈசனின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம் பெருமாள் திரும்பி வந்து, தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மனோ, தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் உரைத்தார். அவருக்கு தாழம்பூ சாட்சி கூறியது.

அனைத்தும் அறிந்த சிவபெருமான், செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கினார். பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது எனக் கூறினார். பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கினார்.

பிரம்ம தேவருக்கும், பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில், மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். ‘அடி முடி காணா அண்ணாமலையார்’ என போற்றப்படுகிறார். சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.

அடி அண்ணாமலை கோவிலின் சிறப்புகள்

அண்ணாமலையார் கோவிலின் ஆட்சிக்குட்பட்ட 3 கோவில்களில் ஒன்றாக விளங்கும் அடி அண்ணாமலை. அண்ணாமலையார் கோவிலுக்கும் முந்தியதும் என்றும், ஆதி அருணாசலம் என்ற பெயருடையது என்றும் கருதப்படுகிறது. திருவண்ணாமலை நகரின் வடமேற்கு திசையில் உள்ள இந்த திவ்விய தலம், முன்னொரு காலத்து பிரம்ம தேவர் தம்மாற் படைக்கப்பட்ட திலோத்தமை மீது கொண்ட அதிமோகத்தினால் எங்கும் ஓடி திரிந்து தன்னிடத்திலே வந்து அங்கு எழுந்தருளும் சிவபெருமானை தரிசிக்கப் பெற்று அவர் அருளால் தங்கிச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டு மகிமை வாய்ந்தது. கிழக்கே திருமாலால் வழிபடப்பெற்ற மூர்த்தி அண்ணாமலை நாதர் எனவும் மேற்கே அவரால் வழிபடப் பெற்ற மூர்த்தி அடி அண்ணாமலை நாதன் எனவும் வழங்கப்படுவதாக புராணம் கூறுகிறது.

கிரிவலத்தின் 9 கி.மீட்டர் தொலைவில் மலையின் மேற்கு பகுதியில் உள்ள இச்சிற்றூரில் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும், மாரியம்மன் கோவில் ஒன்றும், இரு குளங்களும் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப்பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.

இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் “பைங்குவளை” எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன. அண்ணாமலையார் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக சொல்வார்கள்.
Tags:    

Similar News