உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பட்டுப்புழுக்களை பாதுகாப்பாக வளர்க்கும் வழிமுறைகள்

Published On 2022-05-07 09:22 GMT   |   Update On 2022-05-07 09:22 GMT
அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பட்டுப்புழுக்களை பாதுகாப்பாக வளர்க்கும் வழிமுறைகள் மண்டல இணை இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பட்டுப்புழுக்களை பாதுகாப்பாக வளர்க்கும் வழிமுறைகள் மண்டல இணை இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

 ஈரோடு பட்டு வளர்ச்சி துறை மண்டல இணை இயக்குனர் ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி யதால் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் பாக்டீரியா தொற்றால் ‘பிளாச்சரி நோய்’ தாக்கும் வாய்ப்புள்ளது.

புழு வளர்ப்பு மனையின் மேற்கூரை மீது தென்னை ஓலையை பரப்பலாம். அறையின் உட்புறம் ஓலை கூரை அமைக்கலாம். அறையின் ஜன்னலில் கித்தான் சாக்கு கட்டி, தண்ணீர் தெளித்து ஈரமாக்கலாம். குளிர்ந்த காற்று உருவாகி, புழு வளர்ப்பறையை காக்கும்.

சுவர் ஓரங்களில் மணல் திட்டு அமைத்து ஈரமாக வைக்கலாம். புழு வளர்ப்பு கூரையின் உட்புறம் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஈரமாக்கலாம். தண்ணீர் புகை போல பீச்சியடிக்கும் ‘பாக்கர் எந்திரம்’ பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு புழு வளர்ப்புக்கு முன்னும் அறை மற்றும் புழு வளர்ப்பு தளவாடங்களை 100 சதவீதம் மூன்றடுக்கு முறை மருந்தடிப்பு செய்யலாம். முந்தைய புழு வளர்ப்பில் நோய் தொற்று இருந்தால் அறையின் சுவர் தரையில் சுண்ணாம்பு பூச வேண்டும்.

ஒவ்வொரு தோலுரிப்புக்கு முன்பும் சுண்ணாம்பு தூளை தெளித்து தோலுரிப்புக்கு பின்னர் படுக்கையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். திடீரென இரவில் மழை பெய்தால் குளிர்ச்சி, ஈரப்பதம் சீராக்க வேண்டும்.

பட்டுப்புழுக்களுக்கு உணவளிக்க அறுவடை செய்யும் இலையுடன் கூடிய தண்டுகள் குளிர்ச்சியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். தண்டுகளை சேமித்து வைக்கும்போது சுவர் ஓரங்களில் நிற்க வைத்து ஈரதுணியால் மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் புழு வளர்ப்பை தோல்வி அடையாமல் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News