செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் டெக்னீசியன் - நவீன சுகாதார வளாகம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-11-24 09:13 GMT   |   Update On 2021-11-24 09:13 GMT
தினமும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகள் இருந்தாலும் டெக்னீசியன் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தகுதியான டெக்னீசியன்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவ்வப்போது மருத்துவமனையில் செவிலியர் அல்லது ஆய்வக உதவியாளர் என எவரேனும் ஒருவர் சிறிது பயிற்சி எடுத்துக்கொண்டு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. அவ்வகையில் உடுமலை அரசு மருத்துவமனையில் 2 டயாலிசிஸ் கருவிகள் இருந்தும் டெக்னீசியன் கிடையாது. 

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைத்து நோயாளிகளும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே டெக்னீசியன்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மருத்துவப்பணியாளர்கள் கூறுகையில்:

இரு டயாலிசிஸ் கருவிகள் இருந்த போது ஒரு டெக்னீசியன் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இடமும் காலியாக உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். 

காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடத்தை நிரப்ப துறை ரீதியான உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி நவீன சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இங்கு தினமும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி போதிய கழிப்பறை வசதி கிடையாது.

இதனால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறவர்களை காண வரும் உறவினர்கள் திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பறைகளாக பயன்படுத்துகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

இதனை தவிர்க்கும் வகையில் அரசு மருத்துவமனையில் நவீன சுகாதார வளாகம் அமைக்கும் வகையில் ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் கூறுகையில், ‘போதுமான கழிப்பறை வசதிகள் கிடையாது. 

இதுபோன்ற காரணத்தால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News