செய்திகள்
கைது

ரெயிலில் தட்கல் டிக்கெட் எடுத்து தருவதாக ரூ. 10 ஆயிரம் மோசடி - நேபாள வாலிபர் கைது

Published On 2019-10-25 09:57 GMT   |   Update On 2019-10-25 09:57 GMT
ரெயிலில் தட்கல் டிக்கெட் எடுத்து தருவதாக ரூ. 10 ஆயிரம் மோசடி செய்த நேபாள வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

நேபாளத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதற்காக கோவை ரெயில் நிலையம் வந்தனர். கவுகாத்தி ரெயிலில் அவர்கள் பயணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது நேபாளத்தை சேர்ந்தவரும், கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவருமான திருக்கமி (24) அங்கு வந்தார்.

அவர் நேபாள வாலிபர்களிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் கிடைக்காததால் நிற்பதாக கூறினார்கள்.

அதற்கு வாலிபர் திருக்கமி நான் தக்கலில் உங்களுக்கு டிக்கெட் எடுத்து தருகிறேன். ரூ. 10 ஆயிரத்து 500 கொடுங்கள் என்றார். அதன் படி இருவரும் பணம் கொடுத்தனர்.

பின்னர் அவர்களிடம் நீங்கள் உங்கள் அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்து வாருங்கள். அதற்குள் நான் டிக்கெட் எடுத்து வருகிறேன் என்றார். இதனை தொடர்ந்து இருவரும் ஜெராக்ஸ் எடுக்க சென்றனர்.

பின்னர் திரும்பி வந்து பார்த்த போது திருக்கமியை காணவில்லை. அவர் பணத்துடன் மாயமாகி விட்டது தெரிய வந்தது. இது குறித்து 2 வாலிபர்களும் ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருக்கமி மீண்டும் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

இதனை கண்காணிப்பு கேமிரா மூலம் கவனித்த ரெயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தட்கல் முறையில் டிக்கெட் எடுத்து தருவதாக மோசடி செய்த பணத்தை கோத்தகிரிக்கு சுற்றுலா சென்று செலவழித்தாக கூறினார்.

அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News