செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்- சுகாதாரத்துறை செயலாளர்

Published On 2021-02-25 08:02 GMT   |   Update On 2021-02-25 08:02 GMT
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் தற்போது மீண்டும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இது 2-வது அலையாக கருதப்படுகிறது.

இதன் தாக்கம் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விடாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் 7 நாட்கள் அவர்கள் தங்களை சுயமாக கண்காணித்து கொள்ள வேண்டும்.

அதுபோல மற்ற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளும் 2 வாரத்துக்கு தங்களை கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள் காய்ச்சல், சளி, மூச்சு திணறல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு செல்ல வேண்டும்.

அதில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரியிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு அறிகுறி மாறும் வரை கொரோனா தடுப்பு மையங்களில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள்.

பின்னர் சிகிச்சை முடிந்து நோய் இல்லை என்று முடிவு வந்தாலும் அறிகுறி இல்லை என்றாலும் கூட அவர்கள் தங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் உள்ள பரிசோதனை மையத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்தால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அதே போல இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதியானால்தான் மற்ற தொடர்பு விமானங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு ஒரு வாரம் கண்காணிக்கப்பட வேண்டும்.

பரிசோதனையில் நோய் இருப்பது தெரிந்தால் அவர்கள் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். நோய் குணமான பிறகு 2 வாரத்துக்கு அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

மற்ற பயணிகள் 72 மணி நேரத்தில் தங்களை பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 14 நாட்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.

ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் நோய்தொற்று இருந்தால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

மேலும் அதிக நோய்கள் தென்பட்டால் தெருக்கள், கிராமங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News