செய்திகள்
ஜோகோவிச்

உலக டென்னிஸ் போட்டி - ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Published On 2020-11-19 06:56 GMT   |   Update On 2020-11-19 07:24 GMT
ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

லண்டன், நவ. 19-

‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்று வருகிறது.

8 வீரர்களும், 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா), டேனில் மெட்வதேவ் (ரஷியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), டியாகோ சுவார்ட்ஸ்மேன் (அர்ஜெண்டினா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மற்றொரு பிரிவில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் உள்ளனர்.

2 பிரிவிலும், முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

நேற்று நடந்த ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோற்றார். மெட்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

மெட்வதேவ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கடைசி ஆட்டத்தில் டியாகோவுடன் மோதுகிறார்.

ஜோகோவிச் முதல் தோல்வியை சந்தித்தார். அவர் கடைசி ஆட்டத்தில் சுவரேவுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

டொமினிக் தீம் 2 ஆட்டங்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறிவிட்டார். நடால், சிட்சிபாஸ் ஆகியோர் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளனர்.

இன்று நள்ளிரவில் நடைபெறும் ஆட்டத்தில் இருவரும் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறுவர்.

டியாகோ சுவார்ட்ஸ்மேன், ரூபலேவ் ஆகியோர் 2 ஆட்டங்களில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டனர்.

Tags:    

Similar News