செய்திகள்
மெரினா கடற்கரை

மெரினா கடலில் குளித்தால் நடவடிக்கை - சென்னை போலீஸ் கடும் எச்சரிக்கை

Published On 2021-10-09 09:19 GMT   |   Update On 2021-10-09 13:40 GMT
கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், கடலில் மூழ்குபவர்களை மீட்கவும் மெரினாவில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

மெரினா கடலில் போலீஸ் எச்சரிக்கையை மீறி குளிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள்.

இதையடுத்து உயிரிழப்பை தடுக்கவும், கடலில் மூழ்குபவர்களை மீட்கவும் மெரினாவில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளது. யாராவது கடலில் மூழ்கினால் குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து சென்று அவர்களை மீட்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர் கண்ணன், இணை கமி‌ஷனர் ராஜேந்திரன், துணை கமி‌ஷனர் பகலவன் ஆகியோரது மேற்பார்வையில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.

திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் பாஸ்கர் தலைமையில் கட்டுப்பாட்டு அறையில் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலில் இறங்கி குளிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக உதவி கமி‌ஷனர் பாஸ்கர் ஆடியோ மூலம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல்கள் வருமாறு:-

சென்னை பெருநகர காவல் துறை. சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.

இப்பகுதி கடல் ஆழமான பகுதி ஆகும் கடல் அலையின் வேகமும் சீற்றமும் வேகமாக உள்ளது இப்பகுதியில் ஏற்படும் திடீர் சுழல் அலைகள் கடலில் இறங்கி விளையாடுபவர்கள் குளிப்பவர்களை உயிருடன் இழுத்துச் செல்கிறது இளைஞர்கள் சிலர் நீச்சல் அறிந்தவர்களும் அறியாதவர்களும் இறங்கி விளையாடி இன்னுயிரை இழந்துள்ளனர்.

குழந்தைகளை மகிழ்ச்சிக்காக இறங்கி விளையாட அனுமதிக்காதீர். பெற்றோர்களே, பொதுமக்களே எச்சரிக்கை. உயிர் போக வாய்ப்பு இருப்பதால் அன்புச் செல்வங்களை இழக்காதீர். அவசர அழைப்புக்கு 9498100024 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

தயவு செய்து யாரும் கடலில் இறங்கி குளிக்கவோ விளையாடவோ வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கிறோம்.

காவல்துறை அறிவுரையை மீறி இறங்கி விளையாடும் குளிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடலில் இறங்காதீர்கள் அலையில் சிக்கி உயிர் இழக்காதீர். கடல்அலையில் விளையாட்டு வேண்டாம் இளைஞர்களே அலைகளின் தாக்கம் கொடூரமானது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கிறது- கருத்துக்கணிப்பில் தகவல்

Tags:    

Similar News