செய்திகள்
கோப்புபடம்.

விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு பேச்சுவார்த்தை - வருகிற 24ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2021-09-15 07:43 GMT   |   Update On 2021-09-15 07:43 GMT
கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில் இதுவரை 6 முறை நடைபெற்றது.
பல்லடம்:

திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலி உயர்வு இல்லாதது, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தொடர்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கடந்த 2014ல் கடைசியாக கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 

2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதனால்  விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்தநிலையில் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில் இதுவரை 6 முறை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கூலி உயர்வு அமல்படுத்தப்படாவிட்டால், விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வழியில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கோவையில் தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் விசைத்தறியாளர்களுக்கான புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்களான பல்லடம் தலைவர் வேலுசாமி, சோமனூர் தலைவர் பழனிசாமி, கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் மற்றும் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

மற்ற பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் பல்லடம் ரகத்திற்கு மட்டும் தனியாக கூலி உயர்வு பேசி முடித்துக்கொள்ளலாம் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். 

ஆனால் அனைத்துப்பகுதி ரகத்திற்கும் சேர்த்தே கூலி உயர்வு பேச வேண்டுமென விசைத்தறியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதனை ஏற்றக்கொண்ட அதிகாரிகள் சோமனூர் மற்றும் மற்ற பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களையும் அழைத்து வருகிற 24-ந்தேதி அன்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி பேச்சுவார்த்தையை அதிகாரிகள் ஒத்திவைத்தனர். 
Tags:    

Similar News