செய்திகள்
மழை

களக்காடு பகுதியில் மீண்டும் பரவலாக மழை

Published On 2019-12-10 07:57 GMT   |   Update On 2019-12-10 07:57 GMT
களக்காடு பகுதியில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

களக்காடு:

களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து வருகிறது. கடந்த வாரம் கனமழை கொட்டியது. இதனால் களக்காட்டில் ஓடும் பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு ஆகியவற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தலையணையிலும் கடும் வெள்ளம் கரைபுரண்டது.

இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். வெள்ளம் தணிந்ததும் தடை நீக்கப்பட்டு, திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த மழையினால் களக்காடு பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் பல்வேறு குளங்கள் நிரம்பி ததும்புகின்றன.

பச்சையாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 33 அடியை எட்டியுள்ளது. நாங்குநேரியான் கால்வாய் மூலம் நாங்குநேரி பெரியகுளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நடுவை பணிகளும் 90 சதவீதம் முடிவடைந்து, அடுத்த கட்ட விவசாய பணிகளுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காடு பகுதியில் மழை இல்லை. ஆனால் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் காணப்பட்ட நிலையில் மாலையில் திடீரென பரவலாக மழை கொட்டியது. மழையினால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் களக்காடு ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tags:    

Similar News