செய்திகள்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

திருவாரூரில், கொட்டும் மழையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-12 11:35 GMT   |   Update On 2021-01-12 11:35 GMT
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூரில் கொட்டும் மழையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர்:

நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் சம்பா, தாளடி பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பினை விவசாயிகள் சந்தித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். ஆணைகொம்பன் நோய் பாதிப்பிற்கு அறிவிக்கப்பட்டபடி நிவாரணம் உடனே வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கொட்டும் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜோசப், மாவட்ட துணைத்தலைவர்கள் சதாசிவம், பரந்தாமன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News