செய்திகள்
பழையனூரில் திறந்த வெளியில் நெல் கொள்முதல் நடைபெற்ற போது எடுத்த படம்.

பழையனூரில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

Published On 2020-10-22 10:03 GMT   |   Update On 2020-10-22 10:03 GMT
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூரில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே பழையனூர், சாத்தனூர், வடகட்டளை, கானூர், கோம்பூர், நாகங்குடி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர். சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்து பழையனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் அடுக்கி வைக்கின்றனர். மேலும் வெட்ட வெளியில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக அடுக்கி வைக்கும் போது, திடீரென மழை வந்தால் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் ஏற்படுகிறது. இதனால் நெல்லை மீண்டும் உலர வைத்த பிறகே கொள்முதலுக்கு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகளை இரவு நேரங்களில் கண் விழித்து பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலமும் உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சாலையில் மூட்டைகளை அடுக்கி வைப்பதால் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனால் அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன்கருதி பழையனூரில் அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதுவரை வடபாதிமங்கலம் புனவாசலில் கட்டி முடிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News