செய்திகள்
ராஜ் குந்த்ரா

ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2021-09-16 02:56 GMT   |   Update On 2021-09-16 02:56 GMT
தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே ஆகியோருக்கு எதிராக குற்றப்பிரிவு போலீசார் சுமார் 1,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
மும்பை :

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா, ஆபாச படங்கள் தயாரித்து, அவற்றை சில செயலிகள் மூலம் வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே என்பவரும் கைதானார்.

இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா முக்கிய குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே தெரிவித்தார். இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு நேற்று மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே ஆகியோருக்கு எதிராக குற்றப்பிரிவு போலீசார் சுமார் 1,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் மோசடி தொடர்பான பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் குற்றபத்திரிக்கையில், “கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்து ராஜ்குந்த்ராவுக்கு எதிரான பல சான்றுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரத்தில் நளிவடைந்த பெண்களை பயன்படுத்தி அவர்கள் ஆபாச படங்களை உருவாக்கி, அதை பல்வேறு இணையதளங்கள் மற்றும் செல்போன்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோக்களுக்கு செலுத்தப்பட்ட சந்தாக்கள் மூலம் ராஜ் குந்த்ரா பல கோடி கணக்கில் சம்பாதித்தார்.

அந்த பெண்கள் ஏமாற்றப்பட்டனர் அவர்களுக்கு பெயரளவில் மட்டுமே பணம் வழங்கப்பட்டது அல்லது சில நேரங்களில் பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News