உள்ளூர் செய்திகள்
யானை

கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயம்

Published On 2022-04-17 04:05 GMT   |   Update On 2022-04-17 04:05 GMT
பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை மீண்டும் யானை வந்து சேதப்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள காடகநல்லி கிராமத்தை சேர்ந்தவர் பத்மா (வயது 30). இவர் வனப்பகுதியையொட்டி தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் பத்மா நேற்று அதிகாலை வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது யானையின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது யானை ஒன்று மக்காச்சோள பயிரை தின்று நாசப்படுத்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பத்மா யானையை விரட்ட முயற்சித்தார்.

அப்போது யானை அவரை தாக்கி உள்ளது. இதில் பத்மா படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து யானையை காட்டுக்குள் விரட்டி விட்டனர். பின்னர் படுகாயமடைந்த பத்மாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காடகநல்லி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதேப்போல அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாங்கள் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை மீண்டும் யானை வந்து சேதப்படுத்தி விடுமோ என்ற கவலையில் இருக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது நாங்கள் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளோம். யானை போன்ற வன விலங்குகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இரவு காவலில் இருந்து வருகிறோம்.

இருந்தாலும் யானைகள் வனத்தை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஊருக்கு வெளியே பெரிய அகழிகள் அமைக்க நடவடிக்கை வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News