செய்திகள்
கோப்புபடம்

சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க நடவடிக்கை

Published On 2021-09-23 05:10 GMT   |   Update On 2021-09-23 05:10 GMT
உடுமலை கல்வி மாவட்டத்தில் 38 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தேவையான வண்ணச்சீருடைகள் இருப்பு மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் நேரடியாக செயல்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேநேரம் நோய்த்தொற்று குறைந்துள்ளதால் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தேவையான நோட்டு மற்றும் வண்ணச் சீருடைகள் மாவட்டம்தோறும் கொண்டுவரப்பட்டு பள்ளிகளில் இருப்பு வைக்கப்படுகிறது.

அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில் 38 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தேவையான வண்ணச்சீருடைகள் இருப்பு மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகளில் ஏற்கனவே 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது, 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

தவிர 6 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு வண்ணச்சீருடைகள் பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கினால் வண்ணச் சீருடைகள் வினியோகம் செய்யப்படும். இதன் வாயிலாக 2,500 மாணவர்கள், 2,900 மாணவிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News