செய்திகள்
மரணம்

சீர்காழி அருகே சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் கிடைக்காத அதிர்ச்சியில் விவசாயி மரணம்

Published On 2021-03-12 11:13 GMT   |   Update On 2021-03-12 11:13 GMT
சீர்காழி அருகே சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் கிடைக்காத அதிர்ச்சியில் விவசாயி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடைகாரமூலை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி(வயது 84). இவர் சாகுபடி செய்திருந்த 4 ஏக்கர் சம்பா நெற்பயிர் கடந்த கனமழையின் காரணமாக முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்து நாசமாகி விட்டது. இதனால் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்த கிருஷ்ணமூர்த்தி வேதனையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் அறிவித்த நிவாரண தொகை பழைய பாளையம் கிராமத்தில் உள்ள சில விவசாயிகளுக்கு கிடைக்கவில்லையாம். இதில் அரசு சார்பில் ஏக்கருக்கு ரூ. 8000 வீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.விவசாயி கிருஷ்ண மூர்த்திக்கு நிவாரண தொகை ரூ. 4000 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையில் இருந்து வந்தாராம் .

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News