செய்திகள்
போராட்டம்

அரக்கோணம் அருகே கொலையான வாலிபர்கள் 2 பேர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு- 4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Published On 2021-04-11 13:04 GMT   |   Update On 2021-04-11 13:04 GMT
அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசு வேலை மற்றும் இழப்பீடாக தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே உடல்களை பெற்றுக்கொள்வோம் என்றனர்.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சித்தம் பாடி பகுதியில் கடந்த 7-ந் தேதி இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அரக்கோணம் அடுத்த சோகனூர் பகுதியை சேர்ந்த புதுமாப்பிள்ளை அர்ஜுன் (வயது 20), செம்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா (25) ஆகிய 2 வாலிபர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அர்ஜுன், சூர்யா ஆகிய 2 பேரின் உடல்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரின் உடல்களையும் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

அனைத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து ராணிப்பேட்டை கலெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், எஸ்.பி.சிவக்குமார், டி.எஸ்.பி. மனோகரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசு வேலை மற்றும் இழப்பீடாக தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே உடல்களை பெற்றுக்கொள்வோம் என்றனர்.

தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொறுப்பு கலெக்டர் ஜெயச்சந்திரன் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின்படி கொலையானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500க்கான காசோலை மற்றும் அரசு வேலை கிடைக்கும் வரை தலா மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் படுகாயமடைந்த அரக்கோணம் தென்றல் நகரை சேர்ந்த சவுந்தர்ராஜ், சோகனூர் காலனியை சேர்ந்த மதன்குமார் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு கொலையான வாலிபர்களின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

இதை தொடர்ந்து நிவாரண தொகைக்கான காசசோலைகளை கலெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் வழங்கினார்.

இதையடுத்து அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அர்ஜூன், சூர்யா ஆகியோரது உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களும் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இதைதொடர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு முதல் நேற்று வரை 4 நாட்களாக நடந்து வந்த சாலை மறியல், போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News