செய்திகள்
பொங்கல் சிறப்பு பஸ்கள்

பொங்கல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

Published On 2019-12-13 09:14 GMT   |   Update On 2019-12-13 10:21 GMT
பொங்கல் சிறப்பு பஸ்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம்.

பெரும்பாலானவர்கள் பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்ல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நம்பியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பயணத்தை திட்டமிட்டு வருகின்றனர்.

ஜனவரி மாதம் 14-ந் தேதி போகி பண்டிகை (செவ்வாய்க்கிழமை) 15-ந் தேதி தைப்பொங்கல், 16-ந் தேதி திருவள்ளுவர் தினம், 17-ந் தேதி உழவர் தினம் வருகிறது. வார நாட்களில் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையும் அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு பொதுவான விடுமுறையும் வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறைக்கான வாய்ப்பு உள்ளன.

இதனால் வெளியூர் பயணத்தை திட்டமிட வசதியாக அரசு பஸ்சில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நீண்ட தூரம் இயக்கப்படும் பஸ்களுக்கு வழக்கமான 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விரைவு பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்கின்றனர்.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.makemytrip.com, www.paytm.com, www.goibibo.com
ஆகிய இணைய தளங்கள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல சிலர் இப்போதே முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த 2 வாரங்களுக்கு பிறகு முன்பதிவு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு 7 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டை போல இந்த வருடமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதுபற்றிய ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.

சென்னையில் இருந்து மட்டுமின்றி பிற நகரங்களில் இருந்தும் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் விடப்படும். புதிய சொகுசு பஸ்கள் தற்போது விடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவு முன்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

நீண்ட தூரம் மட்டுமின்றி 300 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News