லைஃப்ஸ்டைல்
அறிவியலை விரும்பும் குட்டீஸ்

அறிவியலை விரும்பும் குட்டீஸ்

Published On 2019-11-08 02:29 GMT   |   Update On 2019-11-08 02:29 GMT
குட்டீஸ் உங்களுக்கு ரோபோ பொம்மை பிடிக்குமா? ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு அறிவியலையும் ரொம்ப பிடிக்கும்.
குட்டீஸ் உங்களுக்கு ரோபோ பொம்மை பிடிக்குமா? ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு அறிவியலையும் ரொம்ப பிடிக்கும். நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதும், புலப்படாத மர்மங்களை விளங்க வைப்பதும் அறிவியல்தான். எந்தத் துறைகளும் அறிவியல் சாராமல் இயங்க முடியாது. நாளை மறுநாள் (நவம்பர் 10) உலக அறிவியல் தினமாகும். அறிவியலின் பயன்களையும், அறிவியலின் நன்மைகளையும் அறிவோமா குட்டீஸ்...

அறிவியல் என்பது எந்த ஒன்றையும் தெளிவாக அறிந்து கொள்வது, அறிந்ததை பலருக்கும் பயன்படச் செய்வதாகும்.

வெறும் கற்களைப் பற்றி நன்கு அறிந்தபோதுதான் அதில் இருந்து தீப்பொறி பிறப்பது உணரப்பட்டது. அதுதான் நெருப்பு உருவாக்கும் நுட்பத்திற்கு வழிவகுத்தது. அதுவே சமைத்து சாப்பிட மனித சமூகத்திற்கு வழிகாட்டியது. காலப்போக்கில் நெருப்பைக் கொண்டு உலோகங்களை உருக்கி கருவிகள் தயாரிக்கவும், பல்வேறு கடினமான வேலைகளை எளிதாக சாதிக்கவும் அடிகோலியது.

இப்படித்தான் ஒரு சாதாரண விஷயத்தையும் நன்கு ஆழ்ந்து அறிந்து கொள்ளும்போது, அதை தமது தேவைக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்ற தெளிவு கிடைக்கும். எது எப்படி இயங்குகிறது, எதை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்போது, அது சார்ந்த குறைகள் ஒவ்வொன்றாக களையப்படும். இங்குள்ள ஒவ்வொரு கண்டு பிடிப்புகளும் அப்படி உருவாக்கப்பட் டவைதான்.

நெருப்பு, சக்கரம், வாகனம், எந்திரம், விமானம், கணினி என்று ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பல்வேறு விஷயங்களை உற்று நோக்கி, தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவைதான். அதற்கு அடிப்படையாக அமைவதே அறிவியல்.

இன்று மனிதனின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளால் நாம் எவ்வளவோ தொழில்நுட்ப வசதியுடன் வாழ்கிறோம். ஆனால் இன்னும் எத்தனையோ சிக்கல்கள், தேவைகளுக்கு அறிவியலின் உதவி தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், தேவைகளை எளிதில் நிறைவேற்றிக்கொள்ளவும் அறிவியலாளர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.

ஒவ்வொரு சிறுசிறு சிக்கல்களையும், தேவைகளையும் உற்று கவனித்து அறிந்து கொண்டால் அதை எளிதில் தீர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்களாலும் உருவாக்க முடியும். அதற்குத் தேவையானதுதான் அறிவியல் கல்வி. பள்ளியில் படிப்பது மட்டும் கல்வியல்ல. அனுபவத்திலும், வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் கவனித்து அறிந்து அறிவை வளர்க்கலாம். வாழ்க்கையின் எந்த இடத்திலும், எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காணும் எவரும் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆகலாம்.

உதாரணமாக, ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்த நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம். இன்று விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கலங்கள் உள்ளன. பூமியில் ஆயிரம் அடிக்கு அடியில் என்னென்ன இருக்கிறது என்பதை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளும் செயற்கை கோள் சாதனங்கள் உள்ளன. ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒருவரை துரிதமாக செயல்பட்டு மீட்கும் உபகரணம் இன்னும் நமது நாட்டில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுபோல சுகாதார துறையில் பாதாள சாக்கடைக்குள் அடைப்பை எடுக்க பல தொழிலாளர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இதை மனித உதவியின்றி செய்து முடிக்கும் எளிதான கருவிகள் இன்னும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இப்படி பல்வேறு இடங்களில், ஏராளமான தேவைகளுக்கு கண்டுபிடிப்புகள் அவசியமாக இருக்கிறது. அதை உருவாக்கித்தர ஆயிரமாயிரம் விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். அந்த விஞ்ஞானி நீங்களாகவும் இருக்கலாம். நீங்கள் விஞ்ஞானியாக விரும்பினால் அறிவியலை தேர்வு செய்து படியுங்கள். அன்றாடம் அக்கம்பக்கம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து அனுபவம் பெறுங்கள். அனுபவமும், அறிவும் பெற்று உயரும் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு அவசியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்.

அதே நேரத்தில் அறிவியலானது மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அறிவியலின் பயன்களையும் மக்கள் அறிய வேண்டும். அதனால்தான் இந்த உலக அறிவியல் நாளை மக்களுக்கான அறிவியல் நாளாக கடைப்பிடிக்க யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மாணவர்கள் அறிவியலை படிப்பதுடன் நில்லாமல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அறிவியலின் பயன்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

செல்போன் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பாகும். அதைப் பற்றிய அறிவையும், நுட்பத்தையும் அறிவது நமக்கு பலவிதங்களில் நன்மை செய்யும். ஆரம்பத்தில் தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட செல்போன் கருவி, இன்று வழிகாட்டுதல், பொழுதுபோக்கு, அலுவல், விற்பனை, இணைய சேவை என எண்ணற்ற பயன்பாடுகளின் முக்கிய மையப்புள்ளியாக மாறிவிட்டதல்லவா? இந்தக் கருவியை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும், எந்த அளவுக்கு மேல் பயன்படுத்துவது தீமை தரும் எனும் தெளிவை அனைவரும் பெற வேண்டும்.

இப்படி ஒவ்வொரு கண்டு பிடிப்பு மற்றும் நிகழ்வின் அறிவியல் உண்மைகளை மக்கள் உணரும்போது தீமைகள் வெகுவாக குறைந்துவிடும். அத்தகைய அறிவியல் விழிப்புணர்வை நோக்கமாக கொண்டே இந்த அறிவியல் தினத்தை மக்கள் அறிவியல் தினமாக கொண்டாட யுனெஸ்கோ பன்னாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும், அறிவியலாளர்களும், மாணவர்களும் அறிவியலை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். நாமும் கற்போம், நம்மை சுற்றி இருப்பவர்களும் பயன்பெற, நலம்பெறச் செய்வோம்!
Tags:    

Similar News