ஆன்மிகம்
முக்குறுணி விநாயகர்

முன்னேற்றம் தரும் முக்குறுணி விநாயகர்

Published On 2019-08-29 05:32 GMT   |   Update On 2019-08-29 05:32 GMT
மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரை தரிசிக்கச் செல்லும் வழியில் தெற்குப் பார்த்த வண்ணம் எட்டு அடி உயர ‘முக்குறுணி விநாயகர்’ எழுந்தருளி உள்ளார்.
உலகிற்குத் தேவையான அனைத்துச் செல்வங்களுடன், அதற்கும் மேலான சிவபெருமானின் அருட்செல்வத்தையும் வழங்குவது ‘திருநீறு.’ திருஆலவாய் எனும் மதுரையில், தம் திருமேனி முழுவதும் எப்போதும் விபூதி அபிஷேகம் காணும் ‘விபூதி விநாயகர்’ அருள்பாலிக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு கரையில் இந்த விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். விபூதி விநாயகரின் மேற்புறம் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் அருள்புரிகிறார்.

விபூதி விநாயகரை வழிபடும்போது, பக்தர்களாகிய நாமே சுத்தமான விபூதி கொண்டுவந்து, நமது கைகளாலேயே விபூதி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடலாம். தொடர்ந்து 11 நாட்கள் அல்லது தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகளில் விபூதி அபிஷேகம் செய்து 11 முறை விபூதி விநாயகர் சன்னிதியை வலம்வந்து வழிபட்டால், பித்ரு தோஷங்கள், முன்ஜென்ம வினைகள், வறுமை, சுபகாரியத் தடைகள் முதலியன அகலும் என்கிறார்கள். பூசம், மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் நட்சத்திர நாட்களிலும், பிரதமை, சதுர்த்தி, திரயோதசி, அமாவாசை, முழுமதி நாட்களிலும் விபூதி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பாகும். ‘விபூதி’ என்றால் ‘மேலான செல்வம்’ எனப் பொருள். எனவே இந்த விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் பெருஞ்செல்வம் வந்து சேரும்.

இதேபோல் மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரை தரிசிக்கச் செல்லும் வழியில் தெற்குப் பார்த்த வண்ணம் எட்டு அடி உயர ‘முக்குறுணி விநாயகர்’ எழுந்தருளி உள்ளார். கி.பி.17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னருக்கான அரண்மனை கட்டுவதற்காக, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே மண் எடுக்கப்பட்டது. அப்போது மண்ணுக்கடியில் இருந்து முக்குறுணி விநாயகர் கிடைத்ததாகவும், பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் முக்குறுணி விநாயகரை, மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மிகப்பெரிய அளவில் கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வது வழக்கம். ‘குறுணி’ என்றால் 6 படியாகும். முக்குறுணி என்பதால், 18 படி பச்சரிசியால் கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்கிறார்கள். ஆலய மடப்பள்ளியில் கொழுக்கட்டைச் செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி அன்று பகல் 11 மணி அளவில் கரும்பில் பிள்ளை கட்டி தூக்கி வருவதுபோல் கொழுக்கட்டையை எடுத்துவந்து படைத்து பக்தர்களுக்கும் வினியோகிக்கிறார்கள்.
Tags:    

Similar News