உள்ளூர் செய்திகள்
இளம்பெண் சூர்யா

காதலன் மீது நடவடிக்கைகோரி இளம்பெண் தர்ணா

Published On 2022-01-03 11:44 GMT   |   Update On 2022-01-03 11:44 GMT
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று மதியம் ஒரத்தநாடு அருகே உள்ள  சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகள் சூர்யா (20) என்ற இளம்பெண் வந்தார்.

திடீரென அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தக் கூடாது என கூறி என்ன பிரச்சனை என்று கேட்டனர்.

அதற்கு சூர்யா போலீசாரிடம் அளித்த விவரம் வருமாறு:-
நான் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது எனது ஊரைச்சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்தேன். நாளடைவில் அது காதலாக மாறி காதலித்து வந்தோம்.

அந்த பழக்கத்தின் அடிப்படையில் எங்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்து செல்வார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது வீட்டில் தனியாக இருந்தபோது நான்  உன்னை திருமணம் செய்து கொள்ளபோகிறேன் என்று கூறி என்னை அவரது ஆசைக்கு இணங்க அழைத்தார்.
 
நான் மறுத்து விட்டபோது என்னை வலுக்கட்டாயப்படுத்தி பலவந்தமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று மிரட்டினார். 

நான் அதற்கு பயந்து யாரிடமும் சொல்லவில்லை. அதன்பிறகு நான் திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டேன். அங்கும் அவர்  வந்து என்னுடன் பலமுறை தனிமையில் இருந்து வந்தார்.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்னை திருமணம் செய்து கொள்ளவதாக கூறி சென்றார். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னிடம் பேசுவதையும் தவிர்த்தார்.

இதனால்  என்னை ஏன் திருமணம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று கேட்டதற்கு அவர், அவரது பெற்றோர் நீ ஏழை, உன்னால் நாங்கள் கேட்கும் சீர்வரிசை செய்யமுடியாது. 

அதனால் உன்னை திருமணம் செய்யமுடியாது என்று கூறி இனிமேல் எங்கள் வீட்டு பக்கம் வந்தால் உன்னை அடித்து கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். 

நான் உயிருக்கு பயந்து வந்துவிட்டேன். இது குறித்து கிராம முக்கியஸ்தர்களிடம் கூறியதின் பேரில் கடந்த 
25-ந்தேதி  பஞ்சாயத்து பேசி இரண்டு பேரையும் அழைத்து விசாரித்ததில் என்னை திருமணம் செய்து அழைத்து செல்வதாக பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் கூறினார்.

இந்நிலையில் அதற்கு மறுநாள் நான் எனது வீட்டில் இருந்தபோது அவர் மற்றும் அவரது பெற்றோர் பஞ்சாயத்தார்கள், போலீசுக்கு சென்றால் உன்னையும் உனது குடும்பத்தையும் காலி செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். 

எனவே காதலித்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுக்கும் வாலிபர் மற்றும் அவரது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுங்கள் என போலீசார் கூறியதன் பேரில் சூர்யா மனு கொடுத்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News