செய்திகள்
திஷா ரவி

டூல்கிட் வழக்கு... திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

Published On 2021-02-23 11:03 GMT   |   Update On 2021-02-23 11:03 GMT
டூல்கிட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புதுடெல்லி:

விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட்டை பகிர்ந்ததாக பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்தனர். 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பின்னர் நேற்று மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். ஒரு நாள் அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கிடையே திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது? ஜனவரி 26ல் நடந்த வன்முறைக்கும் டூல்கிட்டுக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா? என கேள்வி எழுப்பியது. 

திஷா தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், திஷா ரவிக்கும் காலிஸ்தான் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதாடினார். சீக்கியர்களுக்கான நீதி அமைப்புடன் அவர் தொடர்பில் இல்லை என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். போலீஸ் காவல் முடிவடைந்ததால் திஷா ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Tags:    

Similar News