செய்திகள்

தஞ்சை அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவி பலி

Published On 2019-05-17 16:21 GMT   |   Update On 2019-05-17 16:21 GMT
தஞ்சை அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்கள் சென்னையை சேர்ந்த பரத் (வயது 21), கேரளா வயநாட்டை சேர்ந்த அரவிந்த் (21), சென்னையை சேர்ந்த சூர்யா (21).

மேலும் இதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் திருவாரூரை சேர்ந்த ரம்யா (21), சென்னையை சேர்ந்த நித்யா (21), இதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு ஜந்தாம் ஆண்டு படித்து வருபவர் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சவுமியா (21).

இதில் மாணவர்கள் பரத், அரவிந்த், சூர்யா ஆகியோர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். மாணவிகள் ரம்யா, நித்யா, சவுமியா ஆகியோர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரளாவை சேர்ந்த மாணவர் அரவிந்தை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக பரத்,ரம்யா,சூர்யா, நித்யா,சௌமியா ஆகியோர் பரத்தின் காரில் திருச்சி சென்றனர். அங்கே அரவிந்தை திருச்சி ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு காரில் தஞ்சைக்கு அதிகாலை 5.30 மணி அளவிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி-திருச்சி சாலையில் மூன்று கண் பாலம் அருகே வந்த போது இவர்களின் கார் டயர் வெடித்து சாலையில் நான்கு முறை உருண்டு கவிழ்ந்துள்ளது. அப்போது காரின் உள்ளே இருந்த மாணவி ரம்யா வெளியே தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். அப்போது அருகே வந்த மற்றொரு அடையாளம் தெரியாத வாகனத்தில் ரம்யாவின் ஆடை மாட்டி கொண்டு சிறிது தூரம் அந்த வாகனம் ரம்யாவை இழுத்து சென்றுள்ளது. இதில் ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும் காருக்குள் அடியில் சிக்கி கொண்டிருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். இதில் நித்யா, சவுமியா, சூர்யா ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News