ஆன்மிகம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில்

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2019-08-31 03:08 GMT   |   Update On 2019-08-31 03:08 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலாகும். கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிவடைந்ததையொட்டி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 28-ந் தேதி இரவு தொடங்கியது. 29-ந் தேதி காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 4-ம் கால பூஜையும், மாலை 5-ம் கால பூஜையும் நடந்தது.

தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணி முதல் பகல் 12 மணி வரை 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை விமானங்கள் திருமஞ்சனமும், கமலவல்லி நாச்சியார் திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. இரவு 7.15 மணி முதல் இரவு 9 மணி வரை 7-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெற உள்ளது. கோவிலின் பிரதான கோபுரம், மூலஸ்தான கோபுரம், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார் உள்ளிட்ட கோபுரங்கள், சன்னதிகளில் உள்ள விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்படும். பின்னர் பக்தர்கள் மீது அவை தெளிக்கப்படும்.

கும்பாபிஷேகத்தையொட்டி மின் விளக்குகளால் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News