செய்திகள்
தேவேகவுடா

மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி போராட்டம்- தேவேகவுடா அறிவிப்பு

Published On 2021-08-23 03:16 GMT   |   Update On 2021-08-23 03:16 GMT
தமிழ்நாட்டின் பேச்சை கேட்டு, மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் நான் கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஆனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மோதலால் நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்பட்டது. விவாதம் நடத்தாமலேயே பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா குறித்து 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டு பேசினேன். அதை தவிர்த்து வேறு விவாதங்கள் நடக்கவில்லை. இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்.

மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை நான் முன் எப்போதும் பார்த்தது இல்லை. இது வேதனை அளிப்பதாக உள்ளது. ஜனநாயக நடைமுறை திசை மாறி செல்கிறது. இதை சரிசெய்ய வேண்டியது அவசியம். நமது முன்னோர்கள் தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்து சுதந்திரம் பெற்று கொடுத்தனர். இதை அரசியல் தலைவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி போராட்டம் நடத்துவேன். இதில் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டின் பேச்சை கேட்டு, மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. இது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது போராட்டம் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.



Tags:    

Similar News