செய்திகள்
கோப்புபடம்

‘வாய்தா’ போல் நீளும் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை-உடன்பாடு ஏற்படாததால் தவிக்கும் திருப்பூர் பின்னலாடை, விசைத்தறி தொழிலாளர்கள்

Published On 2021-09-27 06:43 GMT   |   Update On 2021-09-27 11:23 GMT
கொரோனா காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்த பின்னலாடை ,விசைத்தறியாளர்கள் தற்போது அதில் இருந்து மீண்டு வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பின்னலாடை, விசைத்தறி தொழில்கள் உள்ளன. பின்னலாடை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இதேப்போல் விசைத்தறியாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காடாத்துணிகள் வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழில் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.  

கொரோனா காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்த பின்னலாடை, விசைத்தறியாளர்கள் தற்போது அதில் இருந்து மீண்டு வருகின்றனர்.  

இருப்பினும் ஏற்றுமதிசெய்வதில் சிக்கல், மின்கட்டணம் உயர்வு, ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட  சில பிரச்சினைகள் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கூலி உயர்வு விவகாரம் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட பெரும்பாலான விசைத்தறியாளர்கள் ஒப்பந்த கூலி அடிப்படையில் நெசவு செய்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி போராடி வருகின்றனர். கடந்த காலங்களில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

ஊரடங்கு பாதிப்புகளுக்கு பின் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

7 முறை நடந்தும் ஒவ்வொரு முறையும் ஒத்திவைப்பு என்ற முடிவே எட்டப்பட்டு வருகிறது. இது  விசைத்தறியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில்:

6 ஆண்டுகள் கடந்தும் கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. ஊரடங்கு பாதிப்புகளுக்கு பின் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்தோம். கோர்ட்டு  வழக்குக்கு ‘வாய்தா’ வாங்குவது போல் 8-வது முறையாக மீண்டும் அக்டோபர் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சோமனூர் பகுதி ஜவுளி உற்பத்தியாளர் வந்தால், பல்லடம் பகுதியினர் வருவதில்லை. அவர்கள் வந்தால் சோமனூர் பகுதியினர் வருவதில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்படுகிறது. 

தீபாவளி நெருங்கி வருவதால் அதற்கு முன் கூலி பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும். கலெக்டர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு ஏற்படுத்த வேண்டும்  என்றனர். 

இதேப்போல் திருப்பூர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு நிர்ணயித்து ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. 

சைமா, ஏற்றுமதியாளர் சங்கம், டீமா, நிட்மா, சிம்கா, டெக்மா என  6 பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., எம்.எல்.எப்., எச்.எம்.எஸ்., அண்ணா தொழிற்சங்கம், பி.எம்.எஸ்.,  ஐ.என்.டி.யு.சி., ஆகிய 8 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. 

நடப்பில் இருந்து 90 சதவீத சம்பள உயர்வு, 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும் 30 காசு பஞ்சப்படி உட்பட 16 அம்ச கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி முதல் இதுவரை இருதரப்பினரிடையே 7 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு படிப்படியாக 28 சதவீத சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கங்கள் சம்மதித்துள்ளன. 

தொழிற்சங்கங்கள் கூடுதல் விகிதத்தை எதிர்பார்க்கின்றனர். 28 சதவீதத்திற்கு மேல் உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கங்கள் மறுக்கின்றன. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உருவாகியுள்ளது.

கடந்த 20-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சில் தொழிற்சங்கம் - உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளிடையே காரசார விவாதங்கள் நடந்தன. 

நாளை 28-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை சைமா சங்க அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சுமூக உடன்பாடு காண்பார்களா என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News