ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

அற்புத வரங்களை அருளும் அஞ்சனை மைந்தன்

Published On 2021-04-30 09:12 GMT   |   Update On 2021-04-30 09:12 GMT
ஆஞ்சநேயருக்கு ‘சுந்தரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வால்மீகி மகரிஷி, தான் எழுதிய ராமாயண காவியத்தை 7 காண்டங்களாகப் பிரித்தார். அதில் அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஒரு காண்டத்திற்கு ‘சுந்தர காண்டம்’ என்றும் பெயரிட்டுள்ளார்.
ராமாயணம் என்றால் முதலில் ராமரும், சீதையும் நினைவுக்கு வருவார்கள். அதன்பிறகு நம் நினைவுக்கு வருவது அனுமன்தான். ராமாயணத்தில் ராமரின் உண்மையான, முதன்மையான பக்தனாக இருந்து அனைவரின் அன்பையும் பெற்றவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதா தேவியால், ‘சிரஞ்சீவி’யாக வாழும் வரத்தைப் பெற்றவர். அவர் பிறந்த மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வெகு காலமாக புத்திர பாக்கியம் இல்லை. இதையடுத்து அவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். அவன் முன்பாக தோன்றிய ஈசன், “உனக்கு ஒரு மகள் பிறப்பாள். அவள் மூலமாக ஒரு மகன் பிறப்பான். அவன் இந்த உலகத்தில் வீரமும், வலிமையும் பெற்றவனாகவும், மரணம் இல்லாதவனாகவும் என்னுடைய அம்சத்தோடு பிறப்பான்” என்று அருளினார்.

அதன்படியே குஞ்சரனின் மனைவி ஒரு குழந்தையப் பெற்றாள். அந்தக் குழந்தைக்கு ‘அஞ்சனை’ என்று பெயரிட்டனர். அவள் பருவ வயதை எட்டியதும், வானர வீரனான கேசரி என்பவருக்கு மணம் முடித்து வைத்தனர். ஒரு நாள் அஞ்சனையின் முன்பாக தோன்றிய தர்மதேவதை, “பெண்ணே.. நீ உன் கணவனுடன் வேங்கடமலைக்குச் சென்று ஈசனை நினைத்து தவம் செய். அவருடைய அருளால் உனக்கு உலகம் போற்றும் மகன் பிறப்பான்” என்றது.

இதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற அஞ்சனை, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு கடுமையான தவத்தை மேற்கொண்டாள். அவளது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தன்னுடைய அம்சம் பொருந்திய கனியை அஞ்சனையிடம் சேர்ப்பிக்கும்படி வாயுதேவனுக்கு உத்தரவிட்டார். அதன்படியே செய்தார் வாயு பகவான். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில், அஞ்சனைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனையின் பிள்ளை என்பதால், அதற்கு ‘ஆஞ்சநேயர்’ என்று பெயரிட்டனர். மேலும் வாயுதேவனால் கிடைத்த கனியை உண்டு பிறந்த பிள்ளை என்பதால் அவன் ‘வாயுபுத்திரன்’ என்றும் அழைக்கப்பட்டான். பெரிய தாடைகளைக் கொண்டிருந்ததால் ‘அனுமன்’ என்றும் பெயர் பெற்றான்.

கைகேயி, தசரதனிடம் பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்படி வனத்திற்குள் வந்த ராமபிரானுக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தவர் அனுமன். ராமர் இந்த மண்ணில் வாழ்ந்தவரையிலும் கூட அவருக்கு பணிவிடை செய்வதையே தன்னுடைய பெரும்பேராகக் கருதியவர்.

ஆஞ்சநேயருக்கு ‘சுந்தரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வால்மீகி மகரிஷி, தான் எழுதிய ராமாயண காவியத்தை 7 காண்டங்களாகப் பிரித்தார். அதில் அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஒரு காண்டத்திற்கு ‘சுந்தர காண்டம்’ என்றும் பெயரிட்டுள்ளார்.
Tags:    

Similar News