செய்திகள்
அனுமந்தநகரில் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க. எதிர்கட்சியாக வருவது கூட சந்தேகம்- திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு

Published On 2020-10-03 21:48 GMT   |   Update On 2020-10-03 21:48 GMT
234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க. எதிர்கட்சியாக வருவது கூட சந்தேகம் தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை, பேவர்பிளாக் சாலை, ஆழ்துளை கிணறு, மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதன்படி பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதி, நீதிபதி காலனி, அனுமந்தநகர், தெற்கு மாலைபட்டி, ஸ்ரீநகர், அபிராமிநகர், தெற்கு ரெங்கநாதபுரம், ராமர்காலனி உள்பட 15 இடங்களில் ரூ.10 கோடியே 61 லட்சம் மதிப்பில் 66 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேபோல் அந்த பகுதிகளில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களை நம்பி தான் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதேநேரத்தில் நாங்கள் எதை செய்தாலும், மத்திய அரசுக்கு துணை போவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் மத்திய அரசு நல்லது செய்தால் ஆதரிப்பதையும், தவறு செய்தால் கண்டிப்பதையும் தமிழக அரசு செய்து வருகிறது. தற்போது, வேளாண்மைக்காக புதுமையான திட்டத்தை பிரதமர் அறிவித்து இருக்கிறார். அது, விவசாயிகளுக்கு பயன்தரும் திட்டம் என்பதால் தமிழக அரசு ஆதரிக்கிறது. ஆனால், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி மக்களை துன்புறுத்துகின்றனர். எதற்கெடுத்தாலும் குறைகளை சொல்லி, மக்களை குழப்புவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது.

முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்வதால், ஜெயலலிதாவுக்கு பிறகு மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் சூழல் உருவாகி இருக்கிறது. அ.தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு தி.மு.க. எதிர்கட்சியாக கூட வருமா? என்பது சந்தேகம் தான். மக்கள் எதிர்பார்த்தபடி விலைவாசி உயராத, சட்டம்-ஒழுங்கு கெடாத நல்லாட்சி தமிழகத்தில் நடக்கிறது. இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், கூட்டுறவு அச்சக சங்க தலைவர் ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News