செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது

Published On 2021-10-13 10:15 GMT   |   Update On 2021-10-13 10:15 GMT
ஊத்துக்குளி ஒன்றியத்தில் கணபதிபாளையம் 5 &வது வார்டில் சென்னியப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 12 பதவிகளுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 68.47 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கயம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சியின் 10-வது வார்டு உறுப்பினர், தாராபுரம் ஒன்றியத்தில் 12-வது வார்டு உறுப்பினர், அவிநாசி ஒன்றியத்தில் கருவலூர் ஊராட்சி தலைவர், மூலனூர் ஒன்றியத்தில் எரிசினம்பாளையம் ஊராட்சி தலைவர், உடுமலை ஒன்றியத்தில் ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் என 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  

மேலும் 14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 7 வார்டு உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 39,079, பெண் வாக்காளர்கள் 41,509,  திருநங்கைகள் 4 பேர் என மொத்தம் 80,592 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.   

இதில் ஆண் வாக்காளர்கள் 27,452 பேரும், பெண் வாக்காளர்கள் 27,730 பேரும், திருநங்கை ஒருவர் என மொத்தம் 55,183 வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்கள் 70.24 சதவீதம் பேரும், பெண்கள் 66.8 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இதன் மொத்த சராசரி 68.47 சதவீதம் .

நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 10-வது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி 22 ஆயிரத்து 630 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அதேபோல் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலில் தாராபுரம் ஒன்றியம் 12-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த சுப்பிரமணி 2 ஆயிரத்து 669 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோன்று கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி தலைவராக முருகன் 1571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் .

மூலனூர் ஒன்றியத்தில் எரிசனம்பாளையம் ஊராட்சி தலைவராக மாரித்தாய் 1373 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உடுமலை ஒன்றியத்தில் ஆர்.வேலூர் பஞ்சாயத்து தலைவராக அன்னலட்சுமி 460 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிராம வார்டு கவுன்சிலர் பதவிகள் 14 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 7 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 7 இடங்களுக்கு போட்டி நடைபெற்றது .

இதில் அவிநாசி ஒன்றியம் ராமநாதபுரம் வார்டு எண் 2ல் இளையராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார், பழங்கரை ஒன்றியத்தில் வார்டு எண் 9-ல் தங்கப்பாண்டி 380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் ஒன்றியத்தில் பொன்னாபுரம் வார்டு 1ல் கற்பகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். குடிமங்கலம் ஒன்றியத்தில் ஆமந்தகடவு 5-வது வார்டில் வேலுத்தாய் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

காங்கயம் ஒன்றியம் கணபதிபாளையம் வார்டு 5ல் சோனியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று குண்டடம் ஒன்றியம் எல்லப்பாளையம்புதூர் வார்டு எண்-8ல் சாந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மூலனூர் ஒன்றியத்தில் கருப்பண்ணவலசு வார்டு-3ல் செல்வி 107 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பல்லடம் ஒன்றியத்தில் பணிக்கம்பட்டி ஊராட்சி 8-வது வார்டில் பட்டான் 161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாணிக்கபுரம் 5-வது வார்டில் பிருந்தா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொங்கலூர் ஒன்றியத்தில் உகாயனூர் வார்டு 5-ல் சக்திவேல் 246 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வடக்கு அவிநாசிபாளையம் 8வது வார்டில் சரிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் .

ஊத்துக்குளி ஒன்றியத்தில் கணபதிபாளையம் 5-வது வார்டில் சென்னியப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் வடுகபாளையம் 4வது வார்டு உறுப்பினராக கோகுல்ராஜ் 97 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெள்ளகோவில் ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம் வார்டு-1ல் பொன்னுசாமி 233 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News