கோவில்கள்
சக்கரபாணி திருக்கோவில்

நவகோள்களால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் சக்கரபாணி திருக்கோவில்

Published On 2021-12-28 04:20 GMT   |   Update On 2021-12-28 04:20 GMT
சக்கரபாணி ஆலயத்தை வலம் வந்து வழிபட்டால், திருமண பாக்கியம், புத்திரப்பேறு கிடைக்கும். தீராத வியாதிகள் தீரும். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தல வரலாறு

ஜலந்தராசுரன் என்ற அரக்கனை அழிக்கும் பொருட்டு, சாரங்கபாணி சுவாமியால் திருச்சக்கரம் அனுப்பப்பட்டது. அது பாதாள லோகத்தில் இருந்த அந்த அசுரனை அழித்து, பூமியை பிளந்து கொண்டு காவிரி வழியாக வெளிவந்தது. காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கரங்களில் வந்து அமர்ந்தது. அதை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்தார் பிரம்மன். அந்தச் சக்கரம், சூரியனை விட பன்மடங்கு ஒளி பொருந்தியதாக இருந்தது. இதனால் பொறாமை கொண்ட சூரியன், தன்னுடைய ஒளியையும் அதிகப்படுத்தினான். ஆனால் அந்த ஒளியையும் தனக்குள் இழுத்துக் கொண்டார், சக்கரபாணி. இதனால் ஒளியையும், பலத்தையும் இழந்த சூரியன், இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது, சக்கரபாணி திருக்கோவில்.

மூலவரின் திருநாமம், ‘சக்கரபாணி’. இவரது சன்னிதியின் வடபுறம் விஜயவல்லி தாயார் சன்னிதி இருக்கிறது.

சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், மூன்று கண்களுடன் அருள்பாலித்து வருகிறார்.

கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றிலும் 16 கோவில்கள் உள்ளன. இந்த ஆலயங்களை தரிசித்து, மகாமக குளத்தில் நீராடுபவர்களின் புண்ணியங்கள் அனைத்தும், சக்கரபாணிக்கு உரியதாகும்.

இத்தல இறைவனான சக்கரபாணி, பூமியை பிளந்து கொண்டு காவிரியில் இருந்து தோன்றியவர். காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய இடம், தற்போது ‘சக்கர தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

சூரியன், இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் சரணடைந்த காரணத்தால், நவகோள்களால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இத்தல இறைவனை வழிபட்டால் நீங்கும்.

இத்தல இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளி உள்ளதால், பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வ அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி, ராகு-கேதுக்களால் வரும் பாதிப்புகள் என அனைத்தையும் நீக்கும் சக்தி, சக்ரபாணிக்கு உண்டு.

இங்குள்ள இறைவனை, பிரம்மதேவன், அக்னி பகவான், சூரியன், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

இந்த கோவிலுக்குள் அமைந்திருக்கும் அமிர்த புஷ்கரணி தீர்த்தம், காசியையும், அங்கு பாயும் கங்கையையும் விட புனிதமானது.

இந்த ஆலயத்தை வலம் வந்து வழிபட்டால், திருமண பாக்கியம், புத்திரப்பேறு கிடைக்கும். தீராத வியாதிகள் தீரும்.
Tags:    

Similar News