ஆன்மிகம்
பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக

தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழா: பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-03-12 02:59 GMT   |   Update On 2021-03-12 02:59 GMT
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்றுஇரவு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றுஇரவு முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்றுஇரவு 10 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது.

அப்போது பெருவுடையாருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல தஞ்சையில் உள்ள மற்ற சிவன்கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவையாறு சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவில், திருப்பழனம் ஆபத்சகாயாயேஸ்வரர் கோவில், திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில், திருவேதிகுடி வேதபுரேஸ்வரர் கோவில், கண்டியூர் பிரம்மசிரி கண்டீஸ்வரர் கோவில், திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவில், தில்லைஸ்தானம் நெய்யாடிப்பர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் 4 கால பூஜை விடிய, விடிய நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News