செய்திகள்
கோப்புப்படம்

மெல்போர்ன் நகரில் 262 நாட்களுக்கு பிறகு பொது முடக்கம் வாபஸ்

Published On 2021-10-22 10:58 GMT   |   Update On 2021-10-22 10:58 GMT
மெல்போர்ன் நகரில் 262 நாட்களுக்கு பிறகு பொது முடக்கத்தை அரசு நேற்று ரத்து செய்தது. இதை மக்கள் கொண்டாடினார்கள். தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மெல்போர்ன்:

கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இத்தனைக்கும் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அங்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரம் பேரை மட்டுமே கொரோனா தாக்கி உள்ளது. 1,590 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும் அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும்  ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய நகரமான மெல்போர்ன் நகரில் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதித்தார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாவதாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இடையில் அது விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்தார்கள். 262 நாளாக பொது முடக்கம் நீடித்து வந்தது. இதனால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவர்களது பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

எனவே பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து 262 நாட்களுக்கு பிறகு பொது முடக்கத்தை அரசு நேற்று ரத்து செய்தது. இதை மக்கள் கொண்டாடினார்கள். தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கொரோனாவால் சலூன்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே பலர் முடிவெட்டவில்லை. பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நீண்ட முடியுடன் சலூன்களை நோக்கி ஓடினார்கள். இதனால் சலூன்களில் கூட்டம் அலைமோதியது. பல சலூன்களில் முன்பதிவு செய்து முடிவெட்டினார்கள்.

சலூன் கடை நடத்தும் ஒருவர் இதுபற்றி கூறும்போது, ‘‘அடுத்த மாதம் வரை எங்கள் கடையில் முன்பதிவு முடிந்துவிட்டது’’ என்று கூறினார்.

Tags:    

Similar News