செய்திகள்
கார் பேரணி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி

Published On 2020-12-03 05:47 GMT   |   Update On 2020-12-03 06:51 GMT
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடந்த கார் பேரணியில் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்றன.
வான்கூவர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கார் பேரணி நடத்தினர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கார்கள் மற்றும் டிரக்குகளில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை கட்டியபடி சென்றனர். 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பலர், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் ஆழமான உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். கனடாவில் உள்ள இந்தோ-கனடிய சமூகத்தில் பலர் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் கூறினர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது.  இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே இன்று 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
Tags:    

Similar News