விளையாட்டு
விராட் கோலி

விராட் கோலி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. தவறு செய்து விட்டது: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து

Published On 2022-01-27 06:50 GMT   |   Update On 2022-01-27 06:50 GMT
பல ஆண்டுகளாக கேப்டனாக இருப்பவரை மாற்றுவது என்பது எப்போதும் எளிதானதல்ல என்று ரஷீத் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவர் அணியில் இருந்து பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். அவரது 7 ஆண்டுகால கேப்டன் சகாப்தம் முடிந்தது.

கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சரியில்லை. ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கியதில் கிரிக்கெட் வாரியம் தவறு செய்து விட்டது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நீண்டகாலம் பணியாற்றிய கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் இருப்பது சாத்தியமில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து அறிவேன்.



எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசிய பிறகுதான் 2004-ல் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தேன். அதனால்தான் இந்த குறிப்பிட்ட பிரச்சினையை பி.சி.சி.ஐ. கையாண்ட விதத்தில் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

பல ஆண்டுகளாக கேப்டனாக இருப்பவரை மாற்றுவது என்பது எப்போதும் எளிதானதல்ல. 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக நீங்கள் கேப்டனாக வெற்றிபெற்றால் அணியில் உள்ளவர்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள். எனவே அணியின் சூழலை இது சீர்குலைக்கும்.

அதற்காக எந்தவொரு வீரரும் சிறப்பாக செயல்பட விரும்பமாட்டார்கள் என்று நான் கூறவில்லை. ஒவ்வொரு தொழில்முறை வீரர்களும் சிறப்பாக செயல்படவே விரும்புவார்கள். ஆனால் ஒரு அணியின் சூழல் மாறும்போது, அது பல வழிகளில் பாதிக்கிறது.



இந்திய கிரிக்கெட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.பி.எல். போட்டி வலுவான அடித்தளமாக உள்ளது. இந்த போட்டியினால் நிதி ரீதியில் பி.சி.சி.ஐ. வலுவாக இருக்கிறது.

ரோகித் சர்மா அணியை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐ.பி.எல். போட்டியில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். இதில் அவர் சாதித்து காட்டினார்.

இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

Tags:    

Similar News