வழிபாடு
ஸ்ரீரங்கம் தாயார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ராப்பத்து உற்சவம் நிறைவு

Published On 2022-01-04 09:02 GMT   |   Update On 2022-01-04 09:02 GMT
ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் இந்த திருவிழா நாட்களில் அரையர்கள், பெருமாள் முன் அபிநயத்தோடு பாடுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு உற்சவங்கள், திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மார்கழி, தை மாதங்களில் பகல்பத்து, ராப்பத்து என்று 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தாண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் இந்த திருவிழா நாட்களில் அரையர்கள், பெருமாள் முன் அபிநயத்தோடு பாடுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். எனவே இது திருவத்யயன உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 20 நாள் உற்சவம் முழுவதும் பொருமாள் முன்னிலையிலேயே நடக்கிறது.

தாயாருக்கு இந்த உற்சவத்தில் எவ்வித பங்கேற்பும் இல்லை.ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாயகி தாயார் படித்தாண்டா பத்தினி என்பதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு ஆழ்வார்களின் தீந்தமிழ் பாசுரங்களை கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காமல் போனதற்கு அவர் அடியார்களின் கனவில் தோன்றி வருந்தினாராம். இதனையடுத்து பெருமாளுக்கு நடத்தியதை போல் தாயாருக்கு என்று தனியாக 10 நாள் திருவத்யயன உற்சவம் நடத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ரெங்கநாயகி தாயார் திருவத்யயன உற்சவத்தின் திருமொழித் திருநாள் (பகல் பத்து உற்சவம்) கடந்த 25-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. விழாவின் அடுத்த பகுதியான திருவாய்மொழித் திருநாள் (ராப்பத்து உற்சவம்) 30-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைந்தார். அங்கு அலங்கார கோஷ்டி வகையறா கண்டருளினார். இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை சாற்றுமறை நடைபெற்றது. பின்னர் இரவு 10.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு படிப்பு கண் டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
Tags:    

Similar News