உள்ளூர் செய்திகள்
காய்கறிகள்

மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி-கத்தரிக்காய் விலை ரூ.90-க்கு விற்பனை

Published On 2021-12-06 09:51 GMT   |   Update On 2021-12-06 09:51 GMT
மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, கத்தரிக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
மதுரை:

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக காய்கறி வரத்து கணிசமாக குறைந்தது இதன் காரணமாக கத்தரிக்காய், தக்காளி, முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட நாட்டுக் காய்கறிகளின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்தன.

தக்காளி மற்றும் கத்தரிக்காய், முருங்கைக்காய் ஆகியவை 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் தக்காளி வரத்து தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மதுரை உழவர் சந்தைகளில் நேற்று கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.‌ மேலும் நேற்று 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் இன்று 110 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளியும், கத்தரிக்காயும் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.

மேலும் முருங்கைக்காய் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் விலையும் உயர்ந்து வருகிறது. நேற்று 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் இன்று விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மேலும் சின்ன பாகற்காய் 140 ரூபாய்க்கும், பல்லாரி 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு 40 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

மல்லி 60 ரூபாய்க்கும், கறிவேப்பிலை 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. நாட்டுக்காய்கறிகள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மார்க்கெட்டுகளில் விலையும் குறைய தொடங்கி உள்ளது.

வருகிற நாட்களில் இன்னும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் அதேவேளையில் தள்ளு வண்டிகளில் தக்காளி கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாட்டுத்தாவணி உள்ள மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகள் விலையில் மாற்றம் இல்லை. ஆனாலும் வெளி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறுகையில், மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது மழை குறைய தொடங்கி உள்ளதால் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் காய்கறி விலை வழக்கமான நிலைக்கு வந்து விடும் என்றார்.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் சுற்று பகுதிகளில் மல்லிகை பூக்கள் விவசாயம் அதிகமாக இருந்தாலும் பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் மல்லிகை பூக்கள் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இன்று மல்லிகை கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் பிச்சி 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,200 ரூபாய்க்கும் விற்பனையானது. அரளி 400 ரூபாய், பட்டன் ரோஸ் 500 ரூபாய், முல்லை 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

விலை உயர்வு காரணமாக மாட்டுத்தாவணி மலர் வணிக சந்தையில் வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News