உள்ளூர் செய்திகள்
இரு தரப்பினர் மோதல்

புதுக்கோட்டையில் இரு தரப்பினர் மோதலால் பதட்டம்

Published On 2022-01-15 04:27 GMT   |   Update On 2022-01-15 04:27 GMT
புதுக்கோட்டையில் இரு தரப்பினர் மோதலால் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பொங்கல் பண்டிகை பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையை அடுத்த பூங்குடி கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் தனித்தனியாக பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாலைகளில் திரண்டு நின்று செல்பி எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு அந்த வழியாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

சாலையை மறித்துக்கொண்டு நின்ற இளைஞர்களால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்றவர் தங்களுக்கு வழி விடுமாறு கேட்டார். ஆனால் இளைஞர்கள் வழிவிடாமல் அவருடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் ஒருவழியாக வீடு திரும்பினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த பிரச்சினை குறித்து ஆதரவாளர்களிடம் தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினர் இளைஞர்களிடம் சென்று தட்டிக்கேட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக திரண்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அடித்து உதைத்ததுடன், அருகில் இருந்த கோவில் குளத்தில் மூழ்கடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதுபற்றிய தகவல் கிராமத்தில் காட்டுத் தீயாக பரவியது.

இதையடுத்து இரு தரப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர்கள் வெகுநேரம் வரை கலைந்து செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News