செய்திகள்
உயிரிழந்த புலி

35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த புலி

Published On 2019-11-07 11:19 GMT   |   Update On 2019-11-07 11:19 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த புலி பாறைகளிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் நகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் குனாடா கிராமம் உள்ளது. இங்கு சிர்னா ஆறு உள்ளது. காடுகள் நிறைந்த இப்பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. அங்குள்ள பாலத்தின் மீது இருந்து புலி ஒன்று சிர்னா ஆற்றில் நேற்று குதித்தது. ஆனால் பாறைகளிடையே புலி சிக்கியதால் ஆற்றிலிருந்து மேலே ஏற இயலவில்லை.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து புலியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மிதவை கூண்டு இறக்கி புலியை மீட்க முயன்றனர். ஆனால் கூண்டிலும் புலியால் தாவி ஏற முடியவில்லை. புலியை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இருட்டத் தொடங்கியதால் மீட்புபணியை தொடர இயலவில்லை.

இதையடுத்து இன்று காலை மீண்டும் மீட்புப்பணிகள் தொடர்ந்தன. ஆனால் பாலத்தில் இருந்து குதித்ததால் புலி பலத்த காயமடைந்ததாலும், சோர்வடைந்ததாலும் இறுதிவரை அதனால் மேலே ஏற இயலவில்லை. இதனால் புலி உயிரிழந்தது.

இதையடுத்து, புலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். புலி ஏன் பாலத்தில் இருந்து குதித்தது என தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News