கோவில்கள்
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்

முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்

Published On 2022-02-22 06:55 GMT   |   Update On 2022-02-22 06:55 GMT
இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும்.
‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். சமீப காலத்தில்தான் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் பிரதிஷ்டை ஆகியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகப்பெருமான் குடவரையில் இருப்பதால், அவருக்குரிய அபிஷேகங்கள் அனைத்தும் அங்கிருக்கும் வேலுக்கே நடைபெறுகின்றன. அதேபோல தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் ‘முருகன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும், வடகோடியான சென்னை குரோம்பேட்டையில் ‘குமரன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும் மற்றும் மதுரை அருகிலுள்ள கோவில்பட்டி எனும் தலத்தில் உள்ள ‘சொர்ணமலை' எனும் திருத்தலத்திலும் மலைக்குன்றின் மீது வேல் வைத்து வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. காலப்போக்கில் இங்கெல்லாம் முருகனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும். இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்துள்ளது.

கோவில்பட்டியில் இருந்து இலங்கைக்கு வணிகம் செய்யச் சென்ற முருகன் அடியவர் ஒருவர், இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி உள்ளவர். கதிர்காமத்தில் வேல் வழிபாடே சிறப்பாக உள்ளது. ஆகவே கதிர்காமம் முருகனை நினைத்து, தானும் ஒரு வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இலங்கையில் இருந்து மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்ப நினைத்த அடியவருக்கு, கதிர்காமம் முருகப்பெருமானை பிரிவதை நினைத்து கவலையில் ஆழ்ந்தார்.

அவரது மனக்கவலையை போக்க எண்ணிய முருகப்பெருமான், அவர் வைத்திருந்த வேலுக்குள் தன்னை செலுத்தினார். பின்னர் அசரீரியாக, “அன்பனே! உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊருக்கு வருகிறேன். கதிர்காமத்தில் இருந்து பிடி மண் கொண்டு சென்று, அங்குள்ள மலைக்குன்றில் மூலவராக எமது இந்த திருக்கை வேல் வைத்து வழிபடு. உன் கவலை மட்டுமின்றி, என்னை வழிபடும் பிற அடியவர்களின் கவலையையும் நான் அகற்றுவேன்” என்று கூறி அருளினார்.

கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேலுடன் திரும்பிய அந்த முருக பக்தர், பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார். அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல் தான் இங்கு மூலவராக உள்ளது சிறப்பு.

இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன. கந்தசஷ்டி அன்று இந்த ஆலயத்திற்கு வந்து, ‘சத்ரு சம்கார வேல்’ என்ற பதிகத்தை ஆறு முறை பாராயணம் செய்து, மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி, சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள்.

சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவர் கதிர்வேல், மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 8 மாதம் வழிபாடு செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தீவினை, தீயவை, கர்மவினைகள் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரான பலன் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திர நாள் அன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டால், அடுத்த வருடமே குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதற்கு பலர் சாட்சியாக நிற்கின்றனர். மறு வருடமே குழந்தைப் பேறு கிடைக்கப் பெற்றவர்கள், தங்கள் குழந்தையோடு இத்தலம் வந்து முருகனுக்கு நன்றிக் கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

இங்குள்ள மலையே ‘கதிரேசன் மலை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. தொழில் முனைவோர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து வேலுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வெகு விரைவில் தொழில் அபிவிருத்தி காணலாம் என்பது நம்பிக்கை. இதனால் இந்த மலையை ‘சொர்ண மலை’ என்றும் அழைக்கிறார்கள். மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் ‘ஒளி குகை’ என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள். அவர்களின் தவத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக, யாரும் அங்கு செல்வதில்லை.

திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு. அன்றைய தினம் சொர்ணமலை குன்றில் ‘திருக்கார்த்திகை தீபம்' ஏற்றுகிறார்கள்.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி ஆலயத்துடன் இணைந்த கோவில் இதுவாகும்.

சிவ.அ.விஜய் பெரியசுவாமி

Tags:    

Similar News