செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரி ரூபா

பணி நேரத்தில் போக்குவரத்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை- ஐபிஎஸ் அதிகாரி ரூபா அதிரடி

Published On 2020-11-11 10:21 GMT   |   Update On 2020-11-11 10:21 GMT
போக்குவரத்து போலீசார் சாலைகளில் பணியாற்றும்போது, உயர் அதிகாரிகள் வாகனத்தில் சென்றால், அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக மாநில ஐ.பி.எஸ். அதிகாரியும், மாநில உள்துறை செயலாளருமான ரூபா மீடியாக்களில் பேட்டி கொடுக்கும் போது ஏதாவது ஒரு விழிப்புணர்வு செய்தி கொடுப்பது வழக்கம்.

முன்னதாக ரூபா, சிறைத்துறையில் டி.ஐ.ஜி.யாக இருந்தபோது கைதிகள், போலீசார் மீது ஊழல் புகார் அளித்தார். குறிப்பாக தண்டனை கைதி சசிகலா, டி.ஜி.பி.க்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஆதார பூர்வமாக கூறினார்.

இதையடுத்து அவர் போக்குவரத்து துறை டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது போக்குவரத்து துறையில் இளைஞர்களை அதிகளவு ஊக்குவித்தார்.

இந்த நிலையில் உள்துறை செயலாளர் ரூபா கூறியதாவது:-

போக்குவரத்து போலீசார் மக்களை காப்பாற்றுவது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசார் இல்லையென்றால், மக்கள் சாலைகளில் பாதுகாப்பாக செல்ல முடியாது. தங்கள் உயிரையும், உடல் நலத்தையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு கடமையே கதியென்று இருக்கும், போக்குவரத்து காவலர்கள் சிலர், உயர் அதிகாரிகள் சாலைகளில் வருகிறார்கள் என்றால் பதட்டம் அடைந்து விடுகின்றனர். உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்க வேண்டுமென்ற கவனத்தில், போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்ய தவறி விடுகின்றனர்.

எனவே இனி போக்குவரத்து காவலர்கள் சாலைகளில் பணியாற்றும்போது, உயர் அதிகாரிகள் வாகனத்தில் சென்றால், அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை.

இதை கூடுதல் டி.ஜி.பி. ரவிகாந்தே கவுடாவின் கவனத்திற்கு கொண்டு வரவிரும்பினேன். அதற்காகத்தான் இந்த கருத்தை முன்வைக்கிறேன்.

இந்த நடைமுறையை அமல்படுத்தும்போது, காவலர்கள் தங்கள் உயிரையும் பாதுகாத்து கொள்ள முடியும். வாகன ஓட்டிகளை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறேன்.

சல்யூட் அடிப்பதற்கு பதிலாக அவர்கள் தங்கள் கடமையை செய்தால் போதும். இதை போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

இவ்வாறு உள்துறை செயலாளர் ரூபா கூறினார்.

Tags:    

Similar News