செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி

Published On 2021-05-24 09:59 GMT   |   Update On 2021-05-24 09:59 GMT
குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். மேலும் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூளானது குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

அங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 20, 21-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு(விற்பனை எண்-20) 24 லட்சத்து 3 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது.

இதில் 17 லட்சத்து 46 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6 லட்சத்து 57 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 13 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 57 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.17 கோடியே 92 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.3 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.238 மற்றும் ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.260 என ஏலம் போனது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.103 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.155 முதல் ரூ.183 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.109 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.195 வரையும் இருந்தது. தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அடுத்த ஏலம்(விற்பனை எண்-21) வருகிற 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு 23 லட்சத்து 90 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
Tags:    

Similar News