லைஃப்ஸ்டைல்
மன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா

மன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா...பதறும் மனநல நிபுணர்கள்

Published On 2020-07-04 04:58 GMT   |   Update On 2020-07-04 04:58 GMT
கொரோனா மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.
தெற்கத்தி சீமையான திருநெல்வேலியின் அடையாளச்சின்னங்களில் ஒன்று, இருட்டுக்கடை அல்வா!

மக்களின் நாவு இனிக்க இனிக்க, அந்த அல்வாவை கிளறி கொடுத்த அந்த கடையின் அதிபர் ஹரிசிங் இன்று இல்லை. அவர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். அதுவும் 80 வயதில்....

அவர் மட்டுமா? அவருக்கு முன்பாக கடந்த மே மாதம் 26-ந் தேதியும், 27-ந் தேதியும் அடுத்தடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 50 மற்றும் 57 வயது கொண்ட இருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.

கொரோனாவின் தற்கொலை பாதை ...

இப்படி தற்கொலை மரணங்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கிறது, பாழாய்ப்போன கொரோனா வைரஸ் தொற்று.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதால்தானோ என்னவோ, கொரோனா வைரசையும் தமிழகம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது போல.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு ஒழிச்சலற்ற பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.

மனநலம் பாதிப்பு

அதற்குள்ளே தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குடும்பத்தின் தலைவர்களே மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருவது குடும்பங்களை கதி கலங்க வைத்து வருகிறது.

மனச்சோர்வால் ஆயிரமாயிரம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்கு தூங்கச்செல்வதற்கு முன் நாளை நாம் நலமுடன் எழுந்திருப்போமா என்ற சந்தேகம் பெரும்பாலான மக்களை சித்ரவதை செய்கிறது.

கண்ணீரில் கரையும் வாழ்க்கை

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒரு புறம் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால், இன்னொரு புறம் அந்த வைரசின் புற விளைவுகள் எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும், பொழுதுபோக்கு பூங்காக்களும், திரையரங்குகளும், வணிக வளாகங்களும், விடுதிகளும், உணவகங்களும் மூடப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கிறார்கள். கூலித்தொழிலாளிகள் தொடங்கி ஆட்டோ ரிக்‌ஷா தொழிலாளிகள் வரை ஒட்டுமொத்த தொழிலாளர் துறையும் ஓசையின்றி முடங்கிப்போய் விட்டது.

சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகிப்போக, மிச்சமிருந்த நம்பிக்கையும் பறிபோக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் கண்ணீரில் கரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.

பெருகும் அழைப்புகள்...

சென்னை மனநல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ஆர்.பூர்ண சந்திரிகா, “ கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் மனநலத்தை பல விதங்களிலும் பாதித்து இருக்கிறது. இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரையில் 3,632 தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்தன. 2,603 பேருக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்கினோம். மாவட்டங்களில் உள்ள எங்கள் மையங்களிலும் எங்கள் சேவை தொடர்கிறது” என்கிறார்.

சென்னையில் 4 இலக்கத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினந்தோறும் ஏறுமுகம் கண்டு வருகிறது. இது மாநிலத்தின் கொரோனா பாதிப்பில் முக்கிய பங்களிப்பாக மாறி இருக்கிறது. இதனால் மனதளவில் தளர்ந்து போகிற மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவதற்கு என்று பிரத்யேகமாக ஒரு இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது...

கொரோனா வைரஸ் தொற்றால் மனச்சோர்வுக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிற நிலையில், சென்னை மாஸ்டர்மைண்ட் பவுண்டேசன் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் கூறும்போது, “உளவியல் கண்ணோட்டத்தில் மன அழுத்தம், பதற்றம், கவலை போன்றவற்றால் பாதிக்கப்படாத ஒரே ஒரு மனிதரைக்கூட எங்களால் பார்க்க முடியவில்லை. ஆளுக்கு ஆள் அதன் பாதிப்பும், பாதிப்பின் தீவிரமும் மாறுபடுகிறது” என்கிறார்.

இந்த அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு, நாடு முழுவதும் இலவச கவுன்சிலிங் சேவையை தன்னலமற்று வழங்கிக்கொண்டிருக்கிறது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிற வாய்ப்பை கொண்டுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை பணியில் அமர்த்தாதீர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கிற பெண்களை கொரோனா வைரஸ் தொடர்பான வேலையில் ஈடுபடுத்தாதீர்கள் என்று இந்த அமைப்பு செய்த பரிந்துரையை பஞ்சாப் மாநில அரசு ஏற்று செயல்படுத்தி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த அம்சம்.

எச்சரிக்கும் நிபுணர்கள்...

கொரோனா வைரஸ் தொற்றால் மனிதர்களின் மன நலம் இன்னும் மோசமான நிலைக்கு செல்கிற வாய்ப்பு உண்டு என்று மன நல நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதுபற்றி விரிவாய் சொல்கிறபோது, ஒரு கட்டத்தில் எதற்காக நாம் உயிர் வாழ வேண்டும், தற்கொலை செய்துகொண்டு செத்தால் என்ன என்ற உணர்வுக்கு மக்கள் ஆட்படுவார்கள் என்ற கருத்தை மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் வைக்கிறார்.

அதே நேரத்தில், “மன நலம் பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பாலோருக்கு மருந்துகள் தேவைப்படாது. நிலைமை மோசமாகி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், கொரோனா வைரசை எப்படி சமாளிப்பது? கொரோனா வைரஸ் தொற்று உறுதியானால் எப்படி அதை சந்திப்பது? ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றபின்னர் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது ? இப்படி 3 கட்ட ஆலோசனை மக்களுக்கு தேவைப்படுகிறது என்று லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் யதார்த்தத்தை உணர்த்துகிறார்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பது முக்கியம் என சொல்கிற அவர், ஆஸ்பத்திரிகளில் இருக்கிறபோதும்கூட தொற்று நோய் பீதியை ஏற்படுத்தக்கூடும், அது நோயாளிகளை தற்கொலை எண்ணத்துக்கு தள்ளக்கூடும் என்றும் எச்சரிக்க தவறவில்லை.

மாநகராட்சி நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பெருகி வருகிற இந்நாளில் மாநகராட்சி நிர்வாகம், கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தி வருகிற சூழலில், மக்களின் மனநலம் காக்கவும் வகை செய்திருக்கிறது.

ஒரு மன நல மருத்துவ நிபுணர், ஒரு ஆலோசகர், ஒரு சமூக சேவகர் என அடங்கிய குழுை-வை மண்டலம் தோறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன நல ஆலோசனை வழங்க களம் இறக்கி உள்ளது.

கொரோனா பரவல் பீதிக்கு மத்தியில் மன நல மருத்துவ நிபுணர்களையும், ஆஸ்பத்திரிகளையும் நாடுவதற்கு தயங்குகிற மக்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்காக பல்வேறு அமைப்புகள் தொலைபேசி வழியாக ஆலோசனைகள் வழங்குகின்றன.

சுகாதார தளமான லைப்ரேட், தற்போது மனநல ஆலோசனைகள் பெறுவதற்காக ஆன்லைன் நோயாளிகளின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. அதிலும் மார்ச் 1 முதல் ஜூன் 20 வரையில் இந்த ஏற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.

மும்பை, டெல்லி, புனே, ஆமதாபாத், சென்னை, பெங்களூரு என பெருநகர மக்களே இப்படி மன நல பாதிப்புக்கு ஆளானால் கிராமப்புற மக்களின் நிலை என்னாவது என்று எண்ணுகிறபோதே அடிவயிறு கலங்குகிறது.

எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது. கொரோனாவுக்கும் ஒரு காலம் நிச்சயமாக இருக்கிறது. அது காலமெல்லாம் நம்மோடு இருந்து விடப்போவது இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை மன வயலில் விதையுங்கள். வாழ்க்கை, வசந்தமாகும்.
Tags:    

Similar News