உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடைகளில் வெள்ளிக்கிழமை விற்பனையை அதிகரிக்க முடிவு

Published On 2022-01-12 05:42 GMT   |   Update On 2022-01-12 05:42 GMT
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், கிராமப் பகுதியில் உள்ள கடைகளிலும் தேவையான அளவு மதுபானங்களை இருப்பு வைக்க மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னை:

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக டாஸ்மாக் மது விற்பனை பாதிக்கப்பட்டது.

இந்த பொங்கல் பண்டிகையில் மது விற்பனை பாதிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தற்போது தொற்று வேகமாக பரவுவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் வருகிற 16-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல திருவள்ளுவர் தினத்துக்காக 15-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன.

2 நாட்கள் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் மதுப்பிரியர்கள் திண்டாட்டத்துக்கு ஆளாவார்கள். அதனால் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகை 14-ந்தேதியன்று கொண்டாடப்படுவதால் மதுபானங்களை அதிகளவு குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளைமுதல் அனைத்து கடைகளிலும் முழு அளவு மதுபானங்கள் குவிக்கப்படுகின்றன. 2 நாட்கள் விற்பனையாகக்கூடிய மது அளவை விட கூடுதலாக இருப்பு வைக்க அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், கிராமப் பகுதியில் உள்ள கடைகளிலும் தேவையான அளவு மதுபானங்களை இருப்பு வைக்க மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வழக்கமாக பொங்கல் பண்டிகை காலத்தில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெறும்.

இந்த ஆண்டு தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் மது விற்பனை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மது விற்பனை பாதிக்கப்படாமல் அதிகரிக்கக்கூடிய வகையில் அனைத்து வகையான மதுபானங்களையும் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று பிற்பகல் காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெறுகிறது. மது விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து அதிகாரிகளும் எடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் வெள்ளிக்கிழமை விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் விற்பனையான அளவை விட குறையாமல் விற்பனை செய்ய அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவு மதுபானங்களை இருப்பு வைக்கவும் வலியுறுத்தப்படுகிறது.


Tags:    

Similar News