செய்திகள்
சுபாஷ் பண்ணையார் உள்பட 12 பேர் ஆஜராக வந்தனர்.

பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் உள்பட 12 பேர் கோர்ட்டில் ஆஜர்

Published On 2019-11-19 17:17 GMT   |   Update On 2019-11-19 17:17 GMT
பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் பண்ணையார் உள்பட 12 பேர் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகினர்.

திண்டுக்கல்:

தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன். இவர் கடந்த 10.1.2012-ந் தேதி திண்டுக்கல் அருகில் உள்ள நந்தவனபட்டியில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் இக்கொலையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்த வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையின்போதே ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்ஷா, முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மீதம் உள்ள 14 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று திண்டுக்கல் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக சுபாஷ்பண்ணையார், சண்முகம், அருளானந்தம், நிர்மலா, நட்டு நடராஜன், ஆனந்தராஜ், ராஜேஷ், அந்தோணி, தாராசிங், பிரபு, சன்னாசி, ரமேஷ், ஆகிய 12 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். கோழி அருள் மற்றும் அருள்மொழி ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை.

வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் டிசம்பர் 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

சுபாஷ்பண்ணையார் உள்பட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக வந்ததால் திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News