செய்திகள்
சாயல்குடி அருகே கூரான்கோட்டை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதமடைந்த படம்.

2 நாள் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் புதிய தடுப்பணை இடிந்தது

Published On 2020-11-21 04:03 GMT   |   Update On 2020-11-21 04:03 GMT
சாயல்குடி அருகே 2 நாள் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் புதிய தடுப்பணை இடிந்தது.
சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கூரான்கோட்டை கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்குமுன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் 14.5 மீட்டர் நீளத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை மழைநீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும் கட்டப்பட்டது.

ஆனால், இந்த புதிய தடுப்பணை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நீர்வரத்துக்கு, தாக்குப்பிடிக்காமல் இடிந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.

தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தடுப்பணையை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, தரமான கட்டுமான பொருட்களை கொண்டு புதிய தடுப்பணையை கட்டிக்கொடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் தடுப்பணை சேதம் பற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News