செய்திகள்
தக்காளி

திருவள்ளூரில் கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலை தக்காளி விற்பனை தொடக்கம்

Published On 2021-11-25 10:52 GMT   |   Update On 2021-11-25 10:52 GMT
திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள மொத்த விற்பனை கூட்டுறவு பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்:

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 140 வரை விற்கப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் தக்காளி கிலோ ரூ.79-க்கு விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள மொத்த விற்பனை கூட்டுறவு பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

மேலும் திருவள்ளூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் வாகனம் மூலம் தக்காளியை விற்பனையையும், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை வாங்கிச் சென்றனர்.

திருவள்ளூரில் வெளி சந்தையில் தக்காளி கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.79-க்கு விற்பனை செய்வதால் தக்காளி வாங்க கூட்டம் அலை மோதுகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் வேல்முருகன், துணைப்பதிவாளர் காத்தவராயன் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News