செய்திகள்
மர்மநபர்களால் உடைக்கப்பட்டு கிடக்கும் சாமி சிலைகளை படத்தில் காணலாம்.

பெரம்பலூரில் பெரியாண்டவர் கோவிலில் 13 சாமி சிலைகள் உடைப்பு

Published On 2021-10-08 09:43 GMT   |   Update On 2021-10-08 09:43 GMT
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பெரியாண்டர் கோவிலில் 13 சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு அருகே, அந்த கோவில்களின் தல வரலாற்றின்படி மூலஸ்தான கோவிலான பெரியசாமி மலைக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சிறுவாச்சூர் பேருந்து நிலையம் அருகே பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 13 சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலுக்கு வழக்கம் போல் இன்று காலை சாமி கும்பிட பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட 13 சிலைகளும் உடைக்கப்பட்டு, சேதமடைந்து கிடந்தை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் ஊர் பொதுமக்கள் கோவிலின் முன்பு குவியத் தொடங்கினர். பின்பு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவில்களில் உள்ள சாமி சிலைகளை உடைக்கும் மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதித்தது.

இதனையறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இந்த அசம்பாவித செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

சிறுவாச்சூர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
Tags:    

Similar News